தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்
தெற்கு அந்தமான் கடற்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், இது தென்கிழக்கு வங்கக்கடல் வழியே மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நாளை(நவ.,29) நகர்ந்து சென்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, தாழ்வு மண்டலமானது அடுத்த 2 நாட்கள் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து சென்று புயலாக மாறக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே கிழக்கு திசை நோக்கி வீசும் காற்றில் வேகபாடு மாறுதல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை இன்றும்(நவ.,28), நாளையும் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை
இதன்படி, திருவள்ளூர், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் பட்சத்தில் இன்று சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இது நாளை(நவ.,29) தாழ்வு மண்டலமாக வலுபெறவுள்ள நிலையில் நாளையும் சென்னையில் மழை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல் டிசம்பர் 1ம் தேதி வரை மணிக்கு 90.கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.