IDFC வங்கியில் ரூ.590 கோடி மோசடி செய்த வங்கி அதிகாரிகள்! பின்னணியில் இருந்த மாஸ்டர் மைண்ட் சிக்கியது எப்படி?
செய்தி முன்னோட்டம்
ஹரியானா மாநில அரசின் 'முதலமைச்சர் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் 2.0' நிதியில் நடைபெற்ற பிரம்மாண்ட மோசடி தொடர்பாக, ரிபவ் ரிஷி தலைமையிலான நான்கு பேர் கொண்ட கும்பலை ஹரியானா மாநில லஞ்ச ஒழிப்புத் துறை கைது செய்துள்ளது. அவர்களில் இருவர் முன்னாள் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி அதிகாரிகள், மற்றவர்கள் ஒரு கூட்டு நிறுவனத்தை நடத்தும் தனியார் நபர்கள். ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் முன்னாள் மேலாளரான ரிஷி, தற்போது சண்டிகரில் உள்ள ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் பணிபுரிகிறார் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த மோசடிக்கு பின்னால் இருந்த முக்கிய நபரை எப்படி கைது செய்தது என தற்போது தகவல் வெளியிட்டுள்ளனர் அதிகாரிகள்.
விவரங்கள்
மோசடி நடந்தது எப்படி?
2025 செப்டம்பரில், வீட்டு வசதி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.50 கோடி மற்றும் ரூ.25 கோடி நிதி முறையே IDFC மற்றும் AU ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டது. அரசின் அனுமதி இன்றி இந்தப் பணத்தைத் தொடக்கூடாது என்பது விதிமுறை. ஆனால், கடந்த ஜனவரி மாதம் கணக்குகளை முடித்து பணத்தை திரும்பப் பெற அரசு உத்தரவிட்டபோது, AU வங்கி பணத்தை திருப்பி அளித்தது. ஆனால், IDFC வங்கி ரூ.50 கோடிக்கு பதிலாக வெறும் ரூ. 1.27 கோடியை மட்டுமே வழங்கியது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், போலி நிறுவனங்கள் மூலம் சுமார் ரூ. 590 கோடி வரை நிதி திசைதிருப்பப்பட்டது அம்பலமானது.
நடவடிக்கை
அரசின் அதிரடி நடவடிக்கை
இந்த விவகாரம் குறித்து ஹரியானா சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் நாயப் சிங் சைனி, வங்கியுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ. 583 கோடியை 24 மணி நேரத்திற்குள் மீட்டெடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், தவறு செய்த IDFC ஃபர்ஸ்ட் வங்கி மற்றும் AU ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஆகியவற்றை அரசு பணிகளை மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிட்டார். தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ஊழல் தடுப்புப் பிரிவு தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.