வெற்றியின் விழிம்பில் காங்கிரஸ்: ஆனந்த கண்ணீர் வடித்த டி.கே.சிவகுமார்
செய்தி முன்னோட்டம்
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
இதனிடையே, காங்கிரஸின் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் உணர்ச்சிவசத்துடன் பேட்டி அளித்துள்ளார்.
224 இடங்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 113 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே ஒரு கட்சியால் தனித்து ஆட்சி அமைக்க முடியும்.
ஆனால், இறுதி கருத்துக்கணிப்புகள் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியால் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்றும் கூறி இருந்தது.
இந்நிலையில், அந்த கருத்துகளையெல்லாம் பொய்யாக்கி கிட்டத்தட்ட 140 இடங்களில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
இது குறித்து பேட்டியளித்த காங்கிரஸின் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார், "கர்நாடகாவை நான் காப்பாற்றுவேன்" என்று சோனியா காந்தியிடம் தான் வாக்குறுதி அளித்ததாக கூறியுள்ளார்.
details
சித்தராமையா உட்பட அனைத்து தலைவர்களுக்கும் நன்றி: டி.கே.சிவகுமார்
"கர்நாடகாவை நான் காப்பாற்றுவேன் என்று சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு உறுதியளித்திருந்தேன். சிறையில் என்னை சந்திக்க சோனியா காந்தி வந்ததை என்னால் மறக்க முடியாது" என்று 61 வயதான சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
முதல்வர் பதவிக்கு போட்டியிடும் தலைவர்களில் ஒருவரான டி.கே.சிவகுமார், "காங்கிரஸ் அலுவலகம் எங்கள் கோவில். அடுத்த கட்ட நடவடிக்கையை காங்கிரஸ் அலுவலகத்தில் முடிவு செய்வோம்" என்றும் தெரிவித்துள்ளார்.
"எனது தலைவர் சோனியா காந்திக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். சித்தராமையா உட்பட எனது மாநிலத்தில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், இது எனக்கான வெற்றி மட்டுமல்ல" என்றும் அவர் கூறியுள்ளார்.