மதுரை கருத்தரங்கிற்கு வந்த குஜராத் மாணவி பாலியல் பலாத்காரம் - தமிழக மாணவர்கள் 2 பேர் கைது
குஜராத் மாநிலம் , அகமதாபாத்தை சேர்ந்த மாணவி ஒருவர் ஆன்லைனில் சார்ட்டர்ட் அக்கவுண்ட் பட்டபடிப்பினை படித்து வந்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17, 18 தேதிகளில் மதுரையில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக குஜராத்தில் இருந்து அந்த 22 வயது மாணவி வந்துள்ளார். மதுரை தெப்பக்குளம் பகுதியிலுள்ள தங்கும் விடுதியில் அவர் தங்கியுள்ளார். அப்போது அதே கருத்தரங்கிற்காக அதே விடுதியில் தங்கியிருந்த சென்னையை சேர்ந்த அஷீஷ் ஜெயின்(22), காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜெரோம் கதிரவன்(22) என்ற மாணவர்கள் அந்த மாணவிக்கு பழக்கமாகியுள்ளார்கள். இந்நிலையில் அந்த மாணவிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த 2 மாணவர்கள் அந்த பெண்ணிற்கு உணவும், மருந்தும் வாங்கிவந்து கொடுத்துள்ளார்கள்.
வாட்ஸ்-அப் மூலம் மாணவியிடம் விசாரணை
அந்த உணவினை சாப்பிட்ட சிறிதுநேரத்திலேயே அந்த மாணவி மயக்கமடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது. மயக்கமடைந்த அந்த மாணவியை இந்த மாணவர்கள் இருவரும் தனித்தனியே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள். இதனையடுத்து அதற்கு மறுநாள் குஜராத்திற்கு திரும்பிய அந்த மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் பெற்றோருக்கு நடந்தது குறித்து அம்மாணவி கூறியுள்ளார். இதனையடுத்து உள்ளூர் காவல்துறையில் இவர்கள் சென்று புகாரளித்துள்ளார்கள். சம்பவயிடம் மதுரை என்பதால் அவர்களை அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்பேரில் அந்த மாணவி ஆன்லைன் புகாரினை மதுரை காவல் ஆய்வாளருக்கு அளித்துள்ளார். அதன்படி உதவி ஆணையர் காமாட்சி வாட்ஸ்-அப் மூலம் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது அந்த 2 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.