Loading...
உத்தரகாண்டைத் தொடர்ந்து குஜராத்! குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் பொது சிவில் சட்டம் அமல்
குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் குஜராத்தில் பொது சிவில் சட்டம் அமல்

உத்தரகாண்டைத் தொடர்ந்து குஜராத்! குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் பொது சிவில் சட்டம் அமல்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 03, 2026
08:46 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தைத் தொடர்ந்து, இரண்டாவதாக குஜராத் மாநிலத்தில் பொது சிவில் சட்ட மசோதா 2026-க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த மார்ச் 24 அன்று குஜராத் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இம்மசோதாவிற்கு செப்டம்பர் 17 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து, இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை அக்டோபர் 1 அன்று மாநில அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டம் அமலிற்கு வந்துள்ளது.

பொதுவான விதிகள்

திருமணம் மற்றும் விவாகரத்துக்கான பொதுவான விதிகள்

புதிய பொது சிவில் சட்டத்தின் கீழ், திருமணம் மற்றும் விவாகரத்து நடைமுறைகள் மாநிலம் முழுவதும் ஒரே சீராக்கப்பட்டுள்ளன.

ஒருவர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்வது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், திருமணம் முடிந்த 60 நாட்களுக்குள் அதனைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தவறினால் ரூபாய் 10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

நீதிமன்றத்தின் வழியே அன்றி, மதச்சடங்குகள் மூலம் வெளியில் பெறப்படும் விவாகரத்துகள் இனி சட்டப்பூர்வமாக செல்லாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சொத்துரிமை

லிவ்-இன் உறவுகள் மற்றும் சொத்துரிமை விதிகள்

இந்த சட்டத்தில் லிவ்-இன் உறவில் வாழும் தம்பதிகள் அது குறித்த தகவலைப் பதிவாளரிடம் முறைப்படி பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதில் 21 வயதிற்கு உட்பட்டவர்கள் இருந்தால், அவர்களின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

மேலும், இத்தகைய உறவில் பிறக்கும் குழந்தைகளுக்கு சட்டப்பூர்வ குழந்தைக்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்படும்.

ஆண், பெண் இருபாலருக்கும் சொத்தில் சம உரிமை வழங்கப்படுவதோடு, உயில் எழுதப்படாமல் இறப்பவர்களின் சொத்துகள் வாரிசுரிமை சட்டப்படி பகிர்ந்தளிக்கப்படும்.

ADVERTISEMENT

எதிர்ப்புகள்

பழங்குடியினருக்கு விலக்கு மற்றும் எதிர்ப்புகள்

அரசியலமைப்பு சட்டப் பிரிவு 342-இன் கீழ் வரும் பட்டியலிடப்பட்ட பழங்குடியின மக்களுக்கு பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், இந்த சட்டப்பேரவை விவாதத்தின்போது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தன.

இம்மசோதாவை குழுவின் ஆய்விற்கு அனுப்ப வேண்டும் எனக் கோரிய நிலையிலும், பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு தற்போது சட்டமாகியுள்ளது.

ADVERTISEMENT