கச்சா எண்ணெய் அகற்றும் பணியினை டிசம்பர் 17க்குள் முடிக்க வேண்டும் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
சென்னை மாநகரை அண்மையில் தாக்கிய மிக்ஜாம் புயலின் பொழுது எண்ணூர்-கொசஸ்தலையாற்றில் சிபிசிஎல் ஆலையிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறி பரவியது.
இப்பரவலால் சுற்றுசூழல் மற்றும் மீன்கள் இனப்பெருக்கத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்திய கடற்படை கச்சா எண்ணெய் பரவிய கடற்பகுதியினை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வுச்செய்தது.
அதில் கொசஸ்தலையாற்றின் முகத்துவாரத்திலிருந்து காசிமேடு துறைமுகம் வரையில் சுமார் 20 சதுர கி.மீ.,பரப்பளவிற்கு கச்சா எண்ணெய் பரவியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இவ்விவகாரத்தில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையினை துவங்கியது.
அதன்படி இன்று(டிச.,14)நடைபெற்ற விசாரணையில் மீனவர்கள் தரப்பு, தமிழக அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், சிபிசிஎல் நிறுவனம் உள்ளிட்ட 4 தரப்பினரும் நேரில் ஆஜராகி தங்கள் வாதங்களை முன்வைத்துள்ளனர்.
வாதம்
சிபிசிஎல் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது
அப்போது மீனவர்கள் தரப்பில், 'மீனவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் கொடுக்கப்படாமல் எண்ணெய் அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது'என்று கூறப்பட்டது.
இதனிடையே சிபிசிஎல் தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டதில், 'ஒரு டேங்கருக்கு 220-லிட்டர் வீதம் 33 டேங்கர்களில் 7600-லிட்டர் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டிருந்தது.
மேலும்,'தொடர்ந்து இப்பணி நடக்கும் நிலையில், 4 ஜேசிபி-க்கள், 2 ஆயில் ஸ்கிம்மர்கள், 75 அதிநவீன படகுகள் உள்ளிட்டவை இப்பணிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது அனைத்தையும் பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள், 'மீனவர்களே எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபடும் பொழுது, மணலி தொழிற்சாலை சங்கங்களும் இப்பணியில் ஈடுபடவேண்டும்' என்றும்,
'எண்ணெய் அகற்றும் பணியினை வரும் 17ம்.,தேதிக்குள் செய்து முடிக்கவேண்டும்' என்றும் உத்தரவிட்டனர்.
இவ்வழக்கு வரும் 18ம்.,தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.