கணக்கில் இருந்த பணம் மாயம், மெசேஜ் கூட வரல; பிஎன்பி வங்கியில் ₹35 கோடி கையாடல்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
செய்தி முன்னோட்டம்
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா செக்டார் பி-1 பகுதியில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) கிளையில், வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புத் தொகைகளில் இருந்து சுமார் ₹35 கோடி பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்த பணம் தங்களுக்குத் தெரியாமலேயே வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் முதற்கட்ட வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
மெசேஜ் வரவில்லை
எஸ்எம்எஸ் மெசேஜ் இல்லாமல் கணக்குகளில் இருந்து கழிந்த கோடிக்கணக்கான பணம்
வங்கி வாடிக்கையாளரான விஜேந்திர சிங் என்பவரது கணக்கில் இருந்த ₹88 லட்சத்தில் ₹87 லட்சம் மாயமாகி வெறும் ₹1 லட்சம் மட்டுமே உள்ளது.
அதேபோல் ஹனீஃப் கான் என்பவரது சேமிப்புக் கணக்கில் இருந்த ₹39 லட்சமும் முற்றிலுமாகக் காணாமல் போயுள்ளது. பணம் எடுக்கப்பட்டது அல்லது மாற்றி அனுப்பப்பட்டது குறித்து எவ்வித எஸ்எம்எஸ் மெசேஜும் வரவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், பாஸ்புக் பதிவிட சென்றபோது ஆர்பிஐ தணிக்கை நடப்பதாகக் கூறி வங்கி ஊழியர்கள் தாமதப்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஊழியர்கள் இடைநீக்கம்
கிளை மேலாளர் உட்பட 5 வங்கி ஊழியர்கள் உடனடியாக இடைநீக்கம்
வாடிக்கையாளர்களின் புகார்களைத் தொடர்ந்து பிஎன்பி வங்கி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கிளையின் மேலாளர் உட்பட 5 ஊழியர்களைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதோடு, அக்கிளையின் அனைத்து ஊழியர்களையும் புதிய அதிகாரிகளைக் கொண்டு மாற்றியுள்ளது.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் புகார்கள் முழுமையாகப் பரிசீலிக்கப்பட்டு, உரிய விசாரணைக்கு பின் அவர்களின் பணம் மீட்டெடுத்துத் தரப்படும் என வங்கி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
அத்துடன் வங்கியின் ஊழல் தடுப்புக் குழுவும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணை
காவல்துறை எஃப்ஐஆர் பதிவு மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை
இந்த சம்பவம் குறித்து பிஃரோண்டி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீசந்த் கொடுத்த புகாரின் பேரில் பெட்டா-2 காவல் துறையினர் வழக்குப்பதிவு (எஃப்ஐஆர்) செய்துள்ளனர்.
இதுவரை 18 வாடிக்கையாளர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முறைகேட்டின் அளவு பெரியதாக இருப்பதால், இந்த வழக்கு பொருளாதாரக் குற்றப் பிரிவிற்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த மோசடி எவ்வாறு நடைபெற்றது மற்றும் யார் பின்னணியில் செயல்பட்டார்கள் என்பதை அறிய விரிவான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.