மத நல்லிணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு: இந்து கோவிலுக்கு சீர்வரிசை கொடுத்த இஸ்லாமியர்கள்
திருச்சி மாவட்டம் மணப்பாறையினை அடுத்து வளநாடு என்னும் பகுதியில் ஓர் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த சில நாட்களாக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி அதன் பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று(ஆகஸ்ட்.,20) இந்த கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது. மிக விமர்சையாக நடந்த இந்த கும்பாபிஷேக நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதனிடையே, இக்கோவிலில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த திருக்கல்யாண வைபவத்திற்கு வளநாடு ஜமாத் நிர்வாகம் சார்பில் இஸ்லாம் மதத்தினை சேர்ந்தோர் சீர்வரிசை கொண்டுவரப்பட்டது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இஸ்லாமியர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டு
இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு வளநாடு பள்ளிவாசலில் இருந்து தேங்காய், பூ, பழங்கள், வாழைப்பழம், நெய். அரிசி, பருப்பு, பீரோ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை தட்டில் வைத்து ஏந்திக்கொண்டு கொண்டு ஊர்வலமாக கொண்டு வந்தனர் என்று கூறப்படுகிறது. இந்த சீர்வரிசை நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தநிலையில், சீர்வரிசை பொருட்களை பெற்றுக்கொண்ட கோவில் நிர்வாகம், இஸ்லாமியர்களுக்கு பதில் மரியாதை செய்துள்ளனர். சீர்வரிசை பெறப்பட்ட பின்னர் நடந்த திருக்கல்யாணம் நிறைவுக்கு பின்னர், இஸ்லாமியர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது. மதங்களை கடந்த மனித மாண்பினை வெளிக்கொணரும் வகையில் இந்த வினோத நிகழ்வு பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.