Loading...
நாளை முதல் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி இல்லாவிட்டால் அனுமதி சீட்டு கிடையாது: தமிழக அரசு எச்சரிக்கை
ஜிபிஎஸ் பொருத்தாத கனிம லாரிகளுக்கு நாளை முதல் அனுமதி கிடையாது.

நாளை முதல் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி இல்லாவிட்டால் அனுமதி சீட்டு கிடையாது: தமிழக அரசு எச்சரிக்கை

எழுதியவர் Vasuki
Oct 31, 2026
04:50 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாகக் கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், கனிமங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து சரக்கு வாகனங்களிலும் ஜி.பி.எஸ் (GPS) கருவி பொருத்துவதற்கு தமிழக அரசு வழங்கிய கால அவகாசம் இன்றுடன் (அக்டோபர் 31) நிறைவடைந்தது. இதையடுத்து, நாளை நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்படாத லாரிகளுக்குப் போக்குவரத்து அனுமதிச் சீட்டு (Transport Permit & Transit Pass) வழங்கப்பட மாட்டாது என்றும், விதிகளை மீறும் வாகனங்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

AIS-140 தரநிலை 

ஜி.பி.எஸ் மற்றும் இணையதள ஒருங்கிணைப்பு கட்டாயம்

இதுதொடர்பாகத் தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வகையான சரக்கு வாகனங்களிலும் மத்திய அரசின் 'AIS-140' தரநிலைக் கொண்ட ஜி.பி.எஸ் கண்காணிப்புக் கருவியைப் பொருத்த வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.

மேலும், அந்தக் கருவிகளைச் சுரங்கத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்துடன் (MiMaS Portal) கட்டாயம் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்ததால், நாளை முதல் ஜி.பி.எஸ் பொருத்தாத வாகனங்களுக்கு எக்காரணம் கொண்டும் போக்குவரத்து அனுமதிச் சீட்டோ அல்லது வழித்தடச் சீட்டோ வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் பறிமுதல்

உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை

ஜி.பி.எஸ் கருவி மற்றும் முறையான செல்லத்தக்க அனுமதிச் சீட்டு இல்லாமல் கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும்.

அத்துடன், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் பாயும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.

அதேவேளையில், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு மணல், ஜல்லி உள்ளிட்ட பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், இதுவரை ஜி.பி.எஸ் பொருத்தாத லாரி உரிமையாளர்கள் உடனடியாகத் தர அங்கீகாரம் பெற்ற கருவிகளைப் பொருத்தி இணையதளத்தில் இணைக்க வேண்டும் என்றும், துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT