சோனம் வாங்சுக் விடுதலை: லடாக் வன்முறைக்குப் பிறகு தேசிய பாதுகாப்புச் சட்டக் காவல் ரத்து
செய்தி முன்னோட்டம்
லடாக் தன்னாட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த போராட்டங்களில் முன்னின்று செயல்பட்ட காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் மீதான தேசிய பாதுகாப்புச் சட்ட காவலை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. லடாக்கில் அமைதியை மீட்டெடுக்கவும், அங்குள்ள அமைப்புகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையைத் தொடங்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-
பின்னணி
லே வன்முறை மற்றும் கைது பின்னணி
கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி லே பகுதியில் ஏற்பட்ட கடுமையான சட்டம் ஒழுங்கு சீர்குலைவைத் தொடர்ந்து, செப்டம்பர் 26 அன்று மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டார். அந்த வன்முறைச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த வன்முறைக்கு சோனம் வாங்சுக் தான் முக்கியத் தூண்டுதலாக இருந்தார் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஏற்கனவே வாதிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
விடுவிப்பு
விடுவிப்பதற்கான அரசின் விளக்கம்
சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தண்டனைக் காலத்தில் பாதியைக் கடந்துவிட்ட நிலையில், தற்போது அவரை விடுவிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. லடாக்கில் நிலவும் தொடர் பந்த்கள் மற்றும் போராட்டங்களால் மாணவர்கள், வேலை தேடுபவர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதை அரசு சுட்டிக்காட்டியுள்ளது. சமூகத்தின் அமைதியான சூழலை மீண்டும் கொண்டு வரவும், பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கவும் இந்தத் தடுப்புக் காவல் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை
லடாக் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை
லடாக் மக்களின் கோரிக்கைகள் மற்றும் கவலைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும், உயர் அதிகாரக் குழு மூலம் ஆக்கப்பூர்வமான தீர்வுகள் எட்டப்படும் என்றும் அரசு மீண்டும் உறுதி அளித்துள்ளது. வன்முறை மற்றும் போராட்டங்களைக் கைவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் லடாக்கின் எதிர்காலத்தைப் பாதுகாப்பானதாக மாற்ற ஒத்துழைக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.