
எனக்கு அதிகளவில் வேலையும் இல்லை, அதிகாரமும் இல்லை - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
செய்தி முன்னோட்டம்
தமக்கு அதிகளவு வேலை, அதிகாரம் இரண்டுமே இல்லை என்று ராஜபவனில் நடந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.
புதிய தொழில்முனைவோர், பெருநிறுவன தலைமை நிர்வாகிகள் ஆகியோரோடு தமிழக ஆளுநர் சென்னை கிண்டியில் உள்ள ராஜபவனில் கலந்துரையாடினார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இந்நிகழ்ச்சியில் 245 தொழில் முனைவோரும், நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
அவர்களிடம் பேசிய ஆளுநர் முதலீடு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்த கருத்துக்களை கேட்டறிந்தார்.
அதன் பின்னர் பேசிய அவர், "தோல்விகளை கண்டு பயம் கொள்ளாதீர்கள். நான் பலமுறை தோல்வியுற்றுள்ளேன்" என்று கூறினார்.
தொடர்ந்து, ஒவ்வொரு தொழில் முனைவோரும் நமது நாட்டின் சொத்து என்றும் கூறினார்.
ஆளுநர்
இந்தியாவில் உள்ள மக்கள் மிக திறமை வாய்ந்தவர்கள் - ஆளுநர்
அதனை தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவில் உள்ள மக்கள் மிக திறமை வாய்ந்தவர்கள். இந்தியர்களின் திறமையால் தான் வெளிநாடுகள் வளர்ச்சியடைகிறது" என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.
மேலும், நாட்டின் வளர்ச்சிக்காக தாம் என்ன வேண்டுமானாலும் செய்ய தயார் என்றும், அதனை தடுப்போரை எதிரியாக பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து அவர், ஆளுநர்கள் என்றால் அவர்களுக்கு நிறைய வேலைகள் இருக்கும் என்று மக்கள் மத்தியில் ஒரு மாயை உள்ளது.
ஆனால் அப்படி எதுவுமில்லை, தனக்கு அதிகளவில் வேலைகள் இல்லை, பெரியளவில் அதிகாரமும் இல்லை என்றும் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.