
ஏப்ரல் 2இல் வக்ஃப் வாரிய மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு இந்த வாரம் புதன்கிழமை (ஏப்ரல் 2) மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, தற்போதுள்ள வக்ஃப் சட்டத்தை திருத்தும் நோக்கில் இந்த மசோதா ஏப்ரல் 4 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிப்படுத்தி இருந்தார்.
முன்மொழியப்பட்ட திருத்தங்கள் வக்ஃப் சட்டத்தை அரசியலமைப்பு கொள்கைகளுடன் இணைக்க முயல்கின்றன என்றும், காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் 2013இல் அறிமுகப்படுத்தப்பட்ட விதிகள் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்கின்றன என்றும் உறுதியளித்தார்.
இந்த மசோதா கடந்தகால விஷயங்களுக்கு பயன்படுத்தப்படாது என்றும், குறைகள் உள்ள நபர்கள் சட்ட உதவியை நாடலாம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
எதிர்ப்பு
சட்டத் திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
மத்திய அரசு மசோதாவை நிறைவேற்றும் உறுதியுடன் உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பும் தீவிரமடைந்துள்ளது.
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ரம்ஜானின் இறுதி வெள்ளிக்கிழமை தொழுகையின் போது அடையாளப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
வழிபாட்டாளர்கள் கருப்புப் பட்டைகளை அணியுமாறு வலியுறுத்தியது. ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, மசோதா மூலம் மத நிறுவனங்களை பாஜக குறிவைப்பதாக குற்றம் சாட்டினர்.
எனினும், அஜ்மீர் தர்கா தலைவர் உள்ளிட்ட சில இஸ்லாமிய தலைவர்கள் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.