Page Loader
மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான அரசின் புதிய திட்டம்! 
மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான அரசின் புதிய திட்டம்

மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான அரசின் புதிய திட்டம்! 

எழுதியவர் Arul Jothe
May 19, 2023
10:39 am

செய்தி முன்னோட்டம்

புதிய மருத்துவக் கல்லூரிகளை திறப்பதற்கு சிறிய மாவட்ட மருத்துவமனைகளைப் பயன்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இப்போது தேசிய மருத்துவ ஆணையம் (NMC) இந்த செயல்முறையை எளிதாக்கும் திட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதற்கு மாவட்ட மருத்துவமனைகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பரிந்துரைகளை அது தயாரித்து வருகிறது. "இதுவரை, மாவட்ட மருத்துவமனைகளை, மருத்துவக் கல்லூரிகளாக மாற்றி அமைக்க அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்ட சில வரம்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். இப்போது, மருத்துவ மாணவர்களுக்கு கல்வியை விரிவுபடுத்தும் நோக்கில், சிறிய மாவட்ட மருத்துவமனைகளை, கல்லூரிகளாக பயன்படுத்த முடியுமா என்ற முயற்சிகளும், விவாதங்களும் நடந்து வருகின்றன. அதற்காக பல பரிந்துரைகளும் செய்யப்பட்டுள்ளன,"என்று ஒரு மூத்த அரசாங்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

Hospitals

மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை

இந்தியா சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், பின்தங்கிய மாவட்டங்களில், அதாவது அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, தற்போதுள்ள செயல்பாட்டில் உள்ள மாவட்ட அல்லது பரிந்துரை மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கான, மத்திய நிதியுதவி திட்டத்தை (CSS) செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசு, ஏற்கனவே மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, மருத்துவ படிப்பிற்கான இடங்களை அதிகரித்துள்ளது. 2014க்கு முன், 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை, தற்போது 69% அதிகரித்து, 2023ல் 655 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2014க்கு முன்னர், 51,348 ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்கள், தற்போது 1,00,163 ஆக அதிகரித்துள்ளது.