மூக்கு வழியே செலுத்தத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு
2019ம் ஆண்டு இறுதியில் துவங்கிய கொரோனா பாதிப்புகள் சில மாதங்களுக்கு முன்னேரே சற்று ஓயத்துவங்கி மக்களும் இயல்பு வாழ்விற்கு திரும்பினர். இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் பிஎப்7 என்னும் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவத் துவங்கியுள்ளது. உலகில் உள்ள மற்ற நாடுகளுக்கும் இது பரவிய நிலையில், இந்தியாவிலும் இந்த பிஎப்7 வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புது வகை கொரோனா வேகமாக பரவும் திறன் கொண்டது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி, மூக்கு வழியே செலுத்தப்படும் இந்த கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பூஸ்டராக பயன்படுத்தப்படவுள்ள இந்த மருந்து இன்று முதல் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படவுள்ள தடுப்பு மருந்து
முதற்கட்டமாக இந்த கொரோனா தடுப்பு மருந்து தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவேக்சின், கோவிட் ஷீல்டு தடுப்பூசிகளை போட்டு கொண்டவர்கள் இந்த மூக்கு வழியே செலுத்தப்படும் தடுப்பு மருந்தினை பூஸ்டராக போட்டு கொள்ளலாம். இந்த மருந்தானது மூக்கில் இரண்டு சொட்டுகள் விடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது பரவி வரும் உருமாறிய பிஎப்7 கொரோனா வைரஸ் வலுவான திறன் கொண்டதால் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும், எனவே மக்கள் அரசு எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.