காங்கிரஸில் இருந்து வெளியேறிய சில மணி நேரங்களியிலேயே பாஜகவில் இணைந்தார் கவுரவ் வல்லப்
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப், காங்கிரஸிலிருந்து விலகிய சில மணிநேரங்களிலேயே பாஜகவில் இணைந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியை திசையற்றது என்று குறிப்பிட்டார். அவருடன், பீகார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அனில் சர்மாவும் டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த பிறகு கவுரவ் வல்லப்,"அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என அழைப்பு வந்தது. அந்த அழைப்பை காங்கிரஸ் நிராகரித்தது. என்னால் ஏற்க முடியாது...கூட்டணி தலைவர்கள் சனாதனம் மீது கேள்வி எழுப்பினர்.அதற்கு காங்கிரஸ் ஏன் பதிலளிக்கவில்லை?...நான் இன்று பாஜகவில் இணைந்தேன். இந்தியாவை முன்னேற்றுவதற்கு எனது திறனையும் அறிவையும் பயன்படுத்துவேன் என்று நம்புகிறேன்..." என்றார்.
நேற்று ராஜினாமா..இன்று கட்சித்தாவல்
கவுரவ் வல்லப், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், காங்கிரஸ் கட்சியை 'திசையற்றது' என்றும், சாதிக் கணக்கெடுப்பு போன்ற தாம் வெளியேறியதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு, 'சனாதனத்திற்கு எதிரான' முழக்கங்களை எழுப்ப முடியாது என்றும் கூறினார். "இன்று காங்கிரஸ் கட்சி முன்னேறி வரும் திசையில்லாத பாதையில் எனக்கு உடன்பாடு இல்லை. சனாதனத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பவோ, நாட்டை வளப்படுத்துபவர்களை துஷ்பிரயோகம் செய்யவோ முடியாது. காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவிகள் மற்றும் முதன்மை உறுப்பினர் பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன்," என தனது எக்ஸ் தளத்தில் எழுதினார் வல்லப். மல்லிகார்ஜுன் கார்கேவின் காங்கிரஸ் தலைவர் பிரச்சாரத்தை கையாண்ட கவுரவ் வல்லப், பொருளாதார விவகாரங்களில் திறம்பட குரல் கொடுத்தவர்.