தமிழகத்தில் இருந்து 25 NDA தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்: அமித்ஷா
செய்தி முன்னோட்டம்
வரும் 2024 மக்களவை தேர்தலின் போது, தமிழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 25 தேசிய ஜனநாயகக் கூட்டணி(NDA) தலைவர்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அமித்ஷா கூறியுள்ளார்.
நேற்று வேலூரில் நடைபெற்ற பேரணியின் போது இது குறித்து பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
"2024ஆம் ஆண்டு தேர்தலில் நரேந்திர மோடியை ஆசிர்வதித்து, தேசிய ஜனநாயக கூட்டணியை 25 இடங்களில் தமிழகம் வெற்றி பெற செய்ய வேண்டும்." என்று அமித்ஷா கேட்டுக்கொண்டார்.
மேலும், காங்கிரஸ்-திமுக கூட்டணி அதிக ஊழல் செய்வதாகவும், பரம்பரை அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
detaisl
காங்கிரஸும் திமுகவும் 2ஜி, 3ஜி, 4ஜி கட்சிகள்: அமித்ஷா
"காங்கிரஸும் திமுகவும் 2ஜி, 3ஜி, 4ஜி கட்சிகள். நான் 2ஜி வழக்கு(2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்) பற்றி பேசவில்லை. 2ஜி என்றால் இரண்டு தலைமுறைகள், 3ஜி என்றால் மூன்று தலைமுறைகள், 4ஜி என்றால் நான்கு தலைமுறைகள்,'' என்று அவர் விமர்சித்தார்.
மேலும், சென்னை தெற்கு பகுதியைச் சேர்ந்த கட்சித் தொண்டர்களுடன் உரையாற்றிய அவர், "தமிழகத்தில் பாஜக 25 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் பணி எனக்கு அளித்துள்ளது." என்று கூறினார்.
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.