கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பறிமுதல்
தமிழ்நாடு மாநிலம் கும்பகோணம் மாவட்டத்திற்கு பனாரஸிலிருந்து வந்த ரயிலில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ எடைகொண்ட கஞ்சா பொட்டலங்களை ரயில்வே காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 4.0 உத்தரவின் படி கஞ்சா மற்றும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல்துறை மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் படி கடந்த 7ம் தேதி பனாரஸிலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் நோக்கி வந்த ரயிலானது கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வந்து நின்றது. அப்போது அந்த ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் கழிவறை அருகில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ எடைகொண்ட 3 பெரிய அளவிலான கஞ்சா பொட்டலங்கள் இருந்துள்ளது.
போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு
கும்பகோணம் ரயில் நிலையத்தில் வந்து நின்ற ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் அந்த கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அங்கு நின்று கொண்டிருந்தவர்களை கும்பகோணம் ரயில்வே இருப்பு பாதை தனிப்பிரிவு காவல்துறை விசாரணை செய்துள்ளது. அப்போது அவர்கள் அனைவரும் தெரியாது என்று கூறியுள்ளார்கள். இதனையடுத்து அந்த 3 பொட்டலங்களை காவல்துறையினர் கும்பகோணம் ரயில்வே இருப்பு பாதை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட அந்த கஞ்சா பொட்டலங்களை ரயில்வே காவல்துறையினர் நாகப்பட்டினம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.