விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட பிறகு மெரினாவில் இருந்து 70 டன் கழிவுகள் அகற்றம்
சென்னை மெரினாவில் நடந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு பிறகு கடற்கரையில் ஒதுங்கிய 70 டன் கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியுள்ளனர். இந்தியா முழுவதும் கடந்த 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியோடு பொது இடங்களில் விநாயகர் சிலையினை வைத்து வழிபட்டனர். சென்னையில் மட்டும் 2148 சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. அதன் பிறகு அந்த சிலைகளை நேற்று சென்னை கடற்கரைகளில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டது. சென்னையிலுள்ள பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் மற்றும் காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட 4 கடற்கரை பகுதிகளில் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டன.
இரவோடு இரவாக குப்பைகளை அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள்
நேற்றும், அதற்கு முன்தினமும் பெரிய ஆரவாரத்துடன் கடற்கரைகளுக்கு விநாயகர் சிலைகளை எடுத்து சென்ற பக்தர்கள் அதை கடலில் கரைத்தனர். அப்போது, பூஜை பொருட்கள், பூக்கள், பிரசாதங்கள், வாகனங்களில் இருந்த மரக்கட்டைகள் போன்றவையும் கடலில் வீசப்பட்டன. இதனையடுத்து, கடற்கரை முழுவதும் குப்பை கூளமாகியது. கடந்த இரண்டு நாட்களாக கடலுக்குள் வீசப்பட்ட பொருட்கள் கடலையும் குப்பை ஆக்கியது. இந்நிலையில், இதனால் அதிக கடல் மாசு ஏற்படக்கூடும் என்பதால், நேற்று இரவோடு இரவாக மாநகராட்சி ஊழியர்கள் கிட்டத்தட்ட 70 டன் குப்பைகளையும் கழிவுகளையும் கடல் மற்றும் கடற்கரையில் இருந்து அகற்றினர். மேலும், கடற்கரையில் ஒதுங்கிய விநாயகர் சிலைகளை மீண்டும் கடலில் கரைக்கவும் மாநகராட்சி ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.