ஜி20 மாநாட்டை முன்னிட்டு ஸ்விக்கி, சோமாட்டோ, அமேசான் டெலிவரிகளுக்கு தடை
ஜி20 தலைவர்கள் உச்சி மாநாடு செப்டம்பர் 9 முதல் 10ஆம் தேதி வரை புது டெல்லியில் நடைபெற உள்ளது. புது டெல்லியின் பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையமான பாரத் மண்டபத்தில் இந்த உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. ஜி20 உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் என்பதால், இந்த மாநாடு நடைபெறும் தேதிகளில் புது டெல்லி மாவட்டத்திற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, செப்டம்பர் 9 முதல் 10ஆம் தேதி வரை புது டெல்லி மாவட்டத்தில் கிளவுட் கிச்சன் சேவைகள், வணிக நிறுவனங்கள், சந்தைகள், உணவு டெலிவரி மற்றும் ஆன்லைன் டெலிவரி சேவைகள் போன்றவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்ய அனுமதிக்கப்படும்
"கிளவுட் கிச்சன் மற்றும் உணவு டெலிவரி சேவைகளை நாங்கள் அனுமதிக்க முடியாது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களும் கட்டுப்பாட்டு மண்டலத்தில் செயல்பட அனுமதிக்கப்படாது. டெலிவரி நிர்வாகிகள் மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்யலாம்" என்று புது டெல்லியின் சிறப்பு காவல் ஆணையர்(போக்குவரத்து) எஸ்.எஸ்.யாதவ் செப்டம்பர் 4 அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். இருப்பினும், ஆய்வக அறிக்கைகள் மற்றும் மருத்துவ மாதிரி சேகரிப்புகள் உட்பட அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை வழங்குவதற்கு நகரம் முழுவதும் அனுமதிக்கப்படும். புது டெல்லி மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்கள், மருத்துவமனைகள், வீட்டு பராமரிப்பு, உணவு வழங்குதல், குப்பைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள நிறுவல்களின் வாகனங்கள் சரிபார்ப்புக்குப் பிறகு அனுமதிக்கப்படும்.