கொழுப்பு, சர்க்கரை அதிகமா இருந்தா ரெட் லேபிள்! கோகோ-கோலா எதிர்ப்பையும் மீறி FSSAI முடிவு
செய்தி முன்னோட்டம்
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகள் மற்றும் பானங்களின் முன்பகுதியில் சிவப்பு நிற எச்சரிக்கை லேபிள் (Red Warning Labels) ஒட்டுவதற்கான புதிய முன்மொழிவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. கோகோ-கோலா, நெஸ்ட்லே போன்ற பெருநிறுவனங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, பொதுமக்களின் தீவிர எதிர்ப்புக் குரல் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தலையீடு காரணமாக FSSAI தனது முந்தைய நிலையிலிருந்து பின்வாங்கி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
முன்பக்க லேபிள்
பாக்கெட்டுகளின் முன்பக்கத்தில் வரவிருக்கும் சிவப்பு லேபிள்
புதிய முன்மொழிவின்படி, ஒரு உணவுப் பொருளில் நிறைவுற்ற கொழுப்பு, சர்க்கரை அல்லது உப்பு ஆகிய மூன்று ஊட்டச்சத்துக்களில் இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்டோ அதிக அளவில் இருந்தால், அதன் பாக்கெட்டின் முன்பக்கத்தில் சிவப்பு நிற அருங்கோண வடிவ லேபிள் ஒட்டப்பட வேண்டும்.
இதில் 'HIGH FAT', 'HIGH SUGAR' அல்லது 'HIGH SALT' எனத் தெளிவாகக் குறிப்பிடப்படும்.
இது நுகர்வோரும் குழந்தைகளும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களைத் தேர்வு செய்ய பெரிதும் உதவும்.
உச்ச நீதிமன்றம்
பெருநிறுவனங்களின் எதிர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கண்டனம்
முன்னதாக, இதுபோன்ற எச்சரிக்கை குறியீடுகள் நுகர்வோருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும் எனக் கூறி பெருநிறுவனங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன.
நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று FSSAI இத்திட்டத்தைக் கைவிட முயன்றபோது, உச்ச நீதிமன்றம் மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்தது.
இந்தியாவில் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் வேகமாக அதிகரித்து வருவதைக் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், தனது குடிமக்களின் உடல்நலத்தில் இந்தியா அதிக அக்கறை கொண்டுள்ளது என்பதை உலகம் அறிய வேண்டும் எனக் கூறி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
கட்டுப்பாடுகள்
கட்டம் கட்டமாக அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்
தற்போது உணவுகளின் பின் பக்கத்தில் மட்டுமே இடுபொருட்களின் விவரங்கள் அச்சிடப்பட்டு வரும் நிலையில், புதிய மாற்றம் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
உணவு நிறுவனங்கள் புதிய லேபிளிங் முறைக்கு மாறுவதற்கு ஏதுவாக இந்த விதிமுறைகள் கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படும் என்றும், ஒற்றை இடுபொருள் கொண்ட உணவுகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்படும் என்றும் FSSAI தெரிவித்துள்ளது.
2050க்குள் இந்தியாவில் 450 மில்லியன் மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்படலாம் என ஆய்வுகள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.