Loading...
ஓல்ட் மாங்க், பேக்பைப்பர், ராயல் சேலஞ்ச் மதுபானங்களுக்கு FSSAI தடை விதிப்பு! காரணம் இதுதான்
ஓல்ட் மாங்க், ராயல் சேலஞ்ச் உள்ளிட்ட மதுபானங்களுக்கு FSSAI தடை விதிப்பு

ஓல்ட் மாங்க், பேக்பைப்பர், ராயல் சேலஞ்ச் மதுபானங்களுக்கு FSSAI தடை விதிப்பு! காரணம் இதுதான்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 03, 2026
02:12 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), நாட்டின் பிரபல மதுபான பிராண்டுகளான ஓல்ட் மாங்க், ஆண்டிக்குவிட்டி புளூ, ராயல் சேலஞ்ச் மற்றும் பேக்பைப்பர் டீலக்ஸ் ஆகிய விஸ்கி மற்றும் ரம் வகைகளின் குறிப்பிட்ட தயாரிப்புகளின் விற்பனைக்குத் திடீர் தடை விதித்துள்ளது. இந்த மதுபானங்களில் இயல்பான முறையில் உற்பத்தி நடைமுறைகளைப் பின்பற்றாமல், செயற்கையான சுவையூட்டிகள் மற்றும் நறுமணத் திரவியங்கள் சேர்க்கப்பட்டுள்ளது ஆய்வகப் பரிசோதனையில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆய்வு 

ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சித் தகவல்கள்

வழக்கமாக விஸ்கி அல்லது ரம் தயாரிப்பில் தானியங்கள், கரும்பு சர்க்கரைப் பாகு அல்லது மால்ட் போன்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி பக்குவப்படுத்தும் முறைகளே பின்பற்றப்படும்.

ஆனால், தடையை எதிர்கொண்டுள்ள ஆலைகள் தயாரிப்பு முறையை விரைவுபடுத்த ரம்மில் ரம் சுவையையும், விஸ்கியில் விஸ்கி சுவையையும் வெளிப்புறமாக சேர்த்துள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இது சர்வதேச அளவில் அனுமதிக்கப்படாத தரம் குறைந்த நடைமுறை என்றும், நுகர்வோரை ஏமாற்றும் செயல் என்றும் FSSAI தனது அறிக்கையில் கடுமையாக சுட்டிக்காட்டியுள்ளது.

பிராண்டுகள்

பாதிக்கப்பட்ட பிராண்டுகள் மற்றும் நிறுவனங்களின் விவரங்கள்

மத்திய பிரதேசத்தில் இயங்கும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் (டியாஜியோ) ஆலை தயாரிக்கும் ஆண்டிக்குவிட்டி புளூ மற்றும் ராயல் சேலஞ்ச், இன்ப்ரூ நிறுவனத்தின் பேக்பைப்பர் டீலக்ஸ் மற்றும் ஓல்ட் காஸ்க் ரம், மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள மோகன் ராக்கி ஸ்பிரிங்வாட்டர் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஓல்ட் மாங்க் ரம்மின் 3 குறிப்பிட்ட பிரிவுகள் ஆகியவற்றுக்கு இந்த விற்பனைத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் 7 ஆண்டுகள் பக்குவப்படுத்தப்பட்டது என ஓல்ட் மாங்க் லேபிளில் குறிப்பிடப்பட்டிருந்த விளம்பரமும் தவறானது என மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

ADVERTISEMENT