மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பயண டோக்கன் வழங்க முடிவு
தமிழ்நாடு மாநிலம், சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்ய மூத்த குடிமக்களுக்கு வரும் 21ம்தேதி முதல் கட்டணமில்லா பயண டோக்கன் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனரான அன்பு ஆபிரகாம் செய்தி குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், "சென்னை மாநகர் பேருந்துகளில் 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் பயணம் செய்ய கட்டணமில்லா பயண டோக்கன் அரையாண்டிற்கு ஒரு முறை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டிற்கான டோக்கன்கள் வரும் ஜூன் 21ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை வழங்கப்படும். இந்த டோக்கன்கள் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பயன்படுத்த கூடியதாகும்" என்று கூறப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 40 இடங்களில் டோக்கன்கள் விநியோகம்
மேலும் அதில், "சென்னையில் உள்ள பணிமனைகள், பேருந்து நிலையங்கள் என கிட்டத்தட்ட 40 இடங்களில் ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கான பயண டோக்கன்கள் அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய அடையாள அட்டைகள் வழங்குதல் ஆகியன வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, புதிய அடையாள அட்டைகளை பெற வயது சான்றுக்கான கல்வி சான்றிதழ், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றினை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், இருப்பிட சான்றுக்கு குடும்ப அட்டையின் நகல், 2 பாஸ்போர்ட் அளவிலான வண்ண புகைப்படங்கள் ஆகியன சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.