அமெரிக்காவிற்கு போலி கொரோனா மருந்து அனுப்பி ரூ.6.50 கோடி மோசடி செய்த கணவன் மனைவி கைது
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் டியூசிஎஸ் ப்ளாரிஸ் என்னும் நிறுவனத்திற்கு கொரோனா மருந்துகள் தேவைப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து அந்நிறுவனம் சென்னை கீழ்கட்டளையில் செய்யப்பட்டு வரும் முருகப்பா ஹோல்சேல் சப்ளையர்ஸ் என்னும் நிறுவனத்தில் ஒப்பந்தம் ஆன்லைன் மூலம் போட்டுள்ளது. இதற்கான கட்டணமாக அந்நிறுவனம் ரூ.6,29,63,325 தொகையை அனுப்பியுள்ளது. இந்த தொகையினை பெற்றுக்கொண்ட அந்நிறுவனம் போலி கொரோனா மருந்துகளை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அமெரிக்கா டியூசிஎஸ் ப்ளாரிஸ் நிறுவனம் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. இந்த புகார் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
போலி மருந்து சப்ளை செய்த கணவன் மனைவி கைது
அமெரிக்க நிறுவனமான டியூசிஎஸ் ப்ளாரிஸ் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையினை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் சென்னை கீழ்கட்டளையில் செய்யப்பட்டு வரும் முருகப்பா ஹோல்சேல் சப்ளையர்ஸ் என்னும் நிறுவனத்தை ஹரிகரசுப்ரமணியம்(37) மற்றும் அவரது மனைவி காஞ்சனா(25) ஆகியோர் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அந்த தம்பதியை நேற்று(பிப்.,21) கைது செய்துள்ளார்கள். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை விசாரித்த நீதிபதி ஹரிகரசுப்பிரமணியத்தை மட்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், அவரது மனைவி காஞ்சனா மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி பரிந்துரை செய்துள்ளார்.