ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் பொருளாதார நன்மைகள் ஏற்படும் என தமிழக அரசு அறிக்கை வெளியீடு
சென்னையில் இந்த மாத இறுதியில் நடக்க உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்த முன்முயற்சியால் சென்னையில் கடந்த 2023 டிசம்பரில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அப்போது ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த மாதம் இறுதியில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் போட்டியை நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, ஃபார்முலா 4 கார் பந்தயம் குறித்து எதிர்க்கட்சிகள் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில், தமிழக அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் அறிக்கை
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது பின்வருமாறு:- இந்தியாவே வியக்கும் வண்ணம் சென்னையில் முதல்முறையாக ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளது. தெற்காசியாவின் டெட்ராயிட் என போற்றப்படும் சென்னை ஒரு செழுமையான வாகன பாரம்பரியத்தைக் கொண்டுள்ள நகரம். இந்த போட்டி நடத்தப்படுவதன் மூலம், உலகளாவிய மோட்டார் விளையாட்டில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தமிழகம் குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பைத் தரும். மேலும், இந்திய வீரர்கள் உலகளாவிய வீரர்களுடன் போட்டியிட்டு ஃபார்முலா 1 போன்ற விளையாட்டுகளுக்கு செல்வதற்கு உந்துதலாக இருக்கும். இந்த போட்டி உலகத்தரம் வாய்ந்த பந்தய உள்கட்டமைப்பை இங்கு ஏற்படுத்த உதவும். மேலும், பொருளாதாரத்தை உயர்த்துவதிலும், முதலீடுகளை ஈர்ப்பதிலும் முக்கிய இடம்பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.