ரத்த அழுத்தம், இதயத்துடிப்பை கண்காணிக்கும் நவீன மோதிரம்: முன்னாள் IIT மாணவர்கள் சாதனை
செய்தி முன்னோட்டம்
சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் 'வியூஸ் வியரபிள்' என்னும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தினை சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையத்தில் நடத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனம் முன்னதாகவே ஸ்மார்ட்-வாட்ச் ஒன்றினை வடிவமைத்து அதில் சாதனைப்படைத்து, 30 நாடுகளில் வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறது.
இதனை தொடர்ந்து தற்போது இந்நிறுவனம் 'ஸ்மார்ட் ரிங்' என கூறப்படும் மோதிரம் வடிவிலான கருவி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
இந்த கருவி. மனித உடலின் ஆரோக்கியத்தினை 24 மணிநேரமும் கண்காணிக்க உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.
24 மணிநேரமும் பயன்படுத்தினாலும் 7 நாட்களுக்கு தொடர்ந்து இதிலுள்ள பேட்டரி செயல்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.
மோதிரம்
வரும் அக்டோபர் 25ம் தேதி முதல் இந்தியா முழுவதும் கிடைக்கும்
இதனை அணிந்து கொள்வதன் மூலம் உடலின் வெப்பநிலை, ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு உள்ளிட்டவைகளை துல்லியமாக கண்காணித்து கொள்ளமுடியும் என்றும்,
இவர்கள் முன்னதாக தயாரித்த 'ஸ்மார்ட் வாட்ச்'சை விட 10 மடங்கு எடை குறைவானது என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த நவீன மோதிரம் கொண்டு பணம் செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் பயன்பாட்டிற்காக 'வியூஸ் வியரபிள்' நிறுவனம் ரூபே, மாஸ்டர் கார்டு, விசா உள்ளிட்ட நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
'மேக் இன் இந்தியா' என்பதற்கேற்ப இந்த நவீன மோதிரம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
இது வரும் செப்டம்பர் 27ம் தேதி உலகளவில் வெளியிடப்படவுள்ள நிலையில், இந்தியா முழுவதும் வரும் அக்டோபர் 25ம் தேதி முதல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.