அடர்ந்த காஷ்மீர் வனப்பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை நெருங்கியது இந்திய ராணுவம்
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்கில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்புப் படையினர் தற்போது நெருங்கியுள்ளனர். அனந்த்நாக் கோக்கர்நாக் பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளுக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை நடைபெற்று வருகிறது. பாரா கமாண்டோக்கள் உட்பட ஆயிரக்கணக்கான இந்திய வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே முடிவில்லாத துப்பாக்கிச் சண்டை ஆறாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் ராணுவத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் ஒரு போலீஸ்காரர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். அதிக ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள், இரண்டு அல்லது மூன்று பேர், அடர்ந்த மற்றும் செங்குத்தான காட்டில் அவர்களுக்கு சாதகமான இடத்தில் பதுங்கி உள்ளனர்.
மிகவும் ஆபத்தான நடவடிக்கையை மேற்கொண்டு வரும் பாதுகாப்பு படையினர்
அந்த பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படுகிறது. கடந்த ஆண்டு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் சேர்ந்த பயங்கரவாதி உசைர் கானும் அந்த பகுதியில் தான் பதுங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை முதல் என்கவுண்டர் தளத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால், பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பிர் பஞ்சால் மலைகளில், அடர்ந்த காடுகள், குகைகள் மற்றும் பள்ளங்கள் உள்ளன. இதன் காரணமாக அப்பகுதியில் வெளிச்சம் மிக குறைவாகவே இருக்கும். அதனால், பாதுகாப்பு படையினரின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இந்நிலையில், தற்போது பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் இடத்தையும் அவர்களது ஆயுத கிடங்கையும் பாதுகாப்பு படையினர் நெருங்கியுள்ளனர்.