உணவுப்பாதுகாப்புத்துறை திடீர் ஆய்வு - 100 கிலோவிற்கும் மேலான குட்கா பறிமுதல்
சென்னை மாநகரில் அமைந்துள்ள அமைந்தகரை, கோயம்பேடு, வடபழனி, அரும்பாக்கம், அண்ணாநகர், வில்லிவாக்கம், போன்ற பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் மளிகை கடைகள் மற்றும் பெட்டி கடைகளில் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று(ஆகஸ்ட்.,22) திடீரென தங்கள் ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது தமிழ்நாடு மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா வகை போதை பொருட்கள் சுமார் 100 கிலோவுக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்நிலையில், குட்கா போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்த அபராதம் ரூ.80,000 விதிப்பு
இதன்படி, மொத்த அபராதம் ரூ.80,000 விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு குட்கா மற்றும் பான்மசாலா உள்ளிட்ட பொருள்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையானது ஒவ்வொரு ஆண்டும் புதிப்பிக்கப்பட்டும் வருகிறது என்று கூறப்படுகிறது. இதனிடையே இத்தகைய தடை விதிக்கப்பட்டிருந்தும் அதனை மீறி குட்கா பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது தர நிர்ணய சட்டம் 2006ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தான் தற்போது சென்னை முழுவதும் பல பகுதிகளில் இன்று இந்த ஆய்வினை அதிகாரிகள் நடத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.