மதுரையில் மாடுகளை திருடிய வடமாநில கும்பல் கைது - சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி
மதுரையில் வீடுகளில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு மாடுகள், பசுமாடுகள் முதலியன திருடுபோகும் சம்பவங்கள் அண்மையில் அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த 11ம்தேதி இரவு எஸ்.எஸ்.காலனி, தாமஸ் காலனி பகுதியில் சரக்கு வேனில் மர்மகும்பல் மாடுகளை திருடிசெல்வதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தோர் அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் தப்பிய நிலையில், காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து கூடல்புதூர் பகுதி வாகனசோதனை தீவிரப்படுத்தப்பட்டது. அவ்வழியாக வந்த வாகனத்தை சப்-இன்ஸ்பெக்டர் தவமணி இரும்பு தடுப்பை போட்டு நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் அந்த வாகனம் தடுப்புகளை தள்ளிக்கொண்டு வேகமாக சென்றுள்ளது. இதில் அந்த இரும்பு தடுப்பு தவமணி இடதுகாலில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், அவரை வாகனத்தை ஏற்றி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
ஹரியானாவை சேர்ந்த 5 பேர் கைது - மாடுகளை திருடி கேரளாவில் விற்ற திருட்டு கும்பல்
இதனைதொடர்ந்து, இந்த மாடுதிருட்டு மர்மக்கும்பல் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு, செல்லூர் காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கூடல்புதூர் வாகனசோதனை சாவடியில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து தாராபுரம் பகுதியில் பதுங்கியிருந்த ஹரியானவை சேர்ந்த 5பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் வீட்டுக்கு வெளியில் கட்டப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் சாலைகளில் திரியும் மாடுகளை கடத்தி கேரளாவில் விற்பனை செய்வது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து மாடுகளை கடத்த உபயோகப்படுத்திய வாகனம், ரூ.11,140 பணத்தையும் பறிமுதல் செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த மாடுதிருட்டு பின்னணியில் பலர் உள்ள நிலையில், அவர்களையும் கைதுசெய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.