Page Loader
வட இந்தியாவை வாட்டும் கடும் வெயில்: டெல்லியில் 5 பேரும், நொய்டாவில் 10 பேரும் பலி 

வட இந்தியாவை வாட்டும் கடும் வெயில்: டெல்லியில் 5 பேரும், நொய்டாவில் 10 பேரும் பலி 

எழுதியவர் Sindhuja SM
Jun 19, 2024
12:44 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லியில் கடந்த 72 மணி நேரத்தில் கடும் வெப்பம் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்டவர்கள் வெப்பத் தாக்குதலால் இறந்தனர். நொய்டாவிலும் கடந்த 24 மணி நேரத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். டெல்லியின் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனைகளில் தலா ஒரு இறப்பு பதிவாகியுள்ளது. வெப்பத்தால் பாதிக்கப்பட்ட 36 பேர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லோக் நாயக் மருத்துவமனையில் (LNJP) மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஜூன் 16 அன்று வெப்பத்தால் ஏற்பட்ட பக்கவாதம் காரணமாக ஒரு கார் மெக்கானிக் உயிரிழந்தார். அந்த மெக்கானிக் உட்பட மூன்று பேர் ஜூன் 16 அன்று உயிரிழந்தனர்.

இந்தியா 

60 வயதுக்கு மேற்பட்டவர்களை அதிகம் பாதிக்கும் வெப்ப அலை 

அந்த கார் மெக்கானிக் ஜூன் 15 அன்று 106 டிகிரி காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பீகாரைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் தனது ரயிலைத் தவறவிட்டு விட்டு ஸ்டேஷனில் சுற்றித் திரிந்ததால் வெப்பத் தாக்குதலுக்கு உள்ளாகி பலியானார். 106 முதல் 107 டிகிரி வரை அதிக காய்ச்சலின் அறிகுறிகளுடன் ஏழு பேர் LNJP மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், ஐந்து பேர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் மூன்று நோயாளிகள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். வெப்ப அலையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலாளர்கள் அல்லது ரிக்ஷா இழுப்பவர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் LNJP மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுரேஷ் குமார் கூறியுள்ளார்.