பழைய நாடாளுமன்றத்தின் நினைவுகளை உருக்கமான கடிதங்களாக எழுதிய 10 பெண் எம்.பி.க்கள்
சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக, சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது இந்திய சட்டமன்றம் புதிய வளாகத்திற்கு மாற உள்ளது. இந்நிலையில், பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் மரபுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பத்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தின் மையமாக விளங்கும் கட்டிடத்திற்கு தங்கள் கடிதங்கள் மூலம் மரியாதை செலுத்தியுள்ளனர். அவர்கள் பகிர்ந்து கொண்ட செய்திகளை இப்போது பார்க்கலாம். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது குறிப்பில் 'வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார். அதேசமயம், சிவசேனா(யுபிடி) எம்பி பிரியங்கா சதுர்வேதி, இந்த வரலாற்று கட்டிடம் கண்ட பல தீவிர விவாதங்கள் மற்றும் இடையூறுகள் குறித்து விவரித்தார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, பழைய பார்லிமென்ட் கட்டிடத்தை தனது 'முதல் வீடு' என்று வர்ணித்துள்ளார்.
முதல்முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்ததை நினைவு கூர்ந்தார் பி.டி.உஷா
அகாலிதள எம்பி ஹர்சிம்ரத் கவுர் பாதல், "144 தூண்களை கொண்ட இந்த ஜனநாயகத்தின் கோவில் எனக்கு பல நினைவுகளை வைத்திருக்கிறது." என்று கூறியுள்ளார். மத்திய அமைச்சரும், அப்னா தளம்(எஸ்) எம்.பியுமான அனுப்ரியா படேல், சன்சாத் பவனில் தான் எடுத்து வைத்த முதல் அடியை நினைவு கூர்ந்தார். சுயேச்சை எம்பியான நவ்நீத் ராணா, 'நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை' வழங்கிய நாட்கள் பற்றி எழுதியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின்(என்சிபி) எம்பி சுப்ரியா சுலே தனது தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். ராஜ்யசபா எம்பியும் பழம்பெரும் ஓட்டப்பந்தய வீராங்கனையுமான பி.டி.உஷா, 1986ல், சியோல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பிறகு, பார்லிமென்ட் சென்றதை விவரித்தார்.