அண்ணனூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் திடீர் தீ விபத்து
ஆவடி அருகே அமைந்துள்ளது அண்ணனூர் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் ரயில்வே பணிமனையும் செயல்பட்டு வருகிறதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் நேற்று(டிச.,13) இரவு 11 மணியளவில் திடீரென தீ பிடித்துள்ளது. இதனையறிந்த பயணிகள் மற்றும் அங்கு பணியிலிருந்த அதிகாரிகள் அனைவரும் அலறியடித்து கொண்டு தப்பி ஓடியுள்ளனர். உடனடியாக இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், தீயணைப்பு துறையினர் தீ பிடித்த பகுதிக்கு செல்வதற்குள் மலமளவென தீ பரவியது என்று கூறப்படுகிறது.
உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்
இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவயிடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் அங்கிருந்த ஃபைல்கள், மின் சாதன பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமாயின. நற்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனிடையே இந்த விபத்து குறித்து அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த ஆவடி காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து தங்கள் விசாரணையினை துவங்கினர். அதன்படி இவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இதன் மீதான அடுத்தகட்ட விசாரணைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்து நேர்ந்த காரணத்தினால் அண்ணனூர் ரயில் நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது.