ஹைதராபாத் அருகில் விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து;
மேற்கு வங்காளம்-ஹவுராவில் இருந்து செகந்திரபாத் சென்று கொண்டிருந்த ஃலக்னுமா விரைவு ரயில் ஹைதராபாத் அருகில் சென்ற பொழுது திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இந்த ரயிலில் இருந்த S4, S5, S6, CH உள்ளிட்ட 3 பெட்டிகளில் தீ பிடித்து எரிந்ததாக தெரிகிறது. தீ எரிய துவங்கிய நிலையில், ஓட்டுனரின் சாமர்த்தியத்தால், பொம்மைப்பள்ளி-பகிடப்பள்ளி இடையே இந்த விரைவு ரயிலானது நிறுத்தப்பட்டு, அதிலிருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கிவிடப்பட்டனர். இதனால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் ரயிலின் 2 பெட்டிகள் முழுவதுமாக எரிந்து கருகியுள்ளது என்று கூறப்படுகிறது.
விபத்து குறித்து ரயில்வேத்துறை அதிகாரிகள் விசாரணை
சுமார் 1,500 பயணிகள் இருந்த ரயிலில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து குறித்து தற்போது ரயில்வேத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மீட்பு பணிகள் உடனே துவங்கிய நிலையில், தீ பிடித்த பெட்டிகளின் இணைப்பு தனியே அகற்றப்பட்டது. இந்த விபத்தில் யாரும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படும் நிலையில், இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று உறுதிப்படுத்தப்படவில்லை. இதனிடையே, ரயிலில் பயணித்த பயணி ஒருவர் சார்ஜ் செய்யும் இடத்தில் புகை பிடித்த காரணத்தினால் தீ பற்றியதாக சக பயணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இந்த ஃலக்னுமா விரைவு ரயிலானது மணிக்கு 80கிமீ., முதல் 100கிமீ., வேகத்திற்கு செல்லக்கூடியதாகும். புவனகிரி அருகே வேகம் குறைக்கப்பட்ட பொழுது இந்த விபத்து ஏற்பட்டதால், உயிர்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.