மகன் இறப்புக்கு காரணம் ஆனந்த் மஹிந்திரா; கான்பூரை சேர்ந்த தந்தை வழக்கு பதிவு
உத்தரபிரதேசத்தின் கான்பூரில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் 12 பேர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கான்பூரைச் சேர்ந்த ராஜேஷ் மிஸ்ரா என்பவர், நான்கு சக்கர வாகனத்தின் பாதுகாப்பு குறித்து தவறான உத்தரவாதம் அளித்ததால், தனது மகன் சாலை விபத்தில் இறந்து போனதாக அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, ஜனவரி 14, 2022 அன்று ஒரு விபத்தில் தனது மகன் டாக்டர் அபூர்வ் மிஸ்ராவை இழந்த புகார்தாரர், சனிக்கிழமையன்று (செப்டம்பர் 23) உள்ளூர் நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்று வழக்கு பதிவு செய்துள்ளார். கான்பூரில் உள்ள ராய்பூர்வா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களில் டீலர்ஷிப் மேலாளர் ஆனந்த் கோபால் மஹிந்திராவும் இடம் பெற்றுள்ளார்.
அபூர்வ் மிஸ்ரா இறப்பின் பின்னணி
ராஜேஷ் மிஸ்ராவின் புகாரின்படி, அவர் டிசம்பர் 2, 2020 அன்று பிளாக் மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவியை ரூ. 17.39 லட்சத்திற்கு வாங்கினார். ஆனந்த் மஹிந்திராவின் சமூக ஊடக விளம்பரங்கள் மற்றும் இடுகைகளைப் பார்த்த பிறகு, அதன் பாதுகாப்பு அம்சம் குறித்து நம்பியே இதை வாங்கியுள்ளார். இந்த காரை அவர் தனது மகனுக்கு பரிசளித்த நிலையில், மகன் அபூர்வ், ஜனவரி 14, 2022 அன்று லக்னோவிலிருந்து கான்பூர் திரும்பியபோது விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படாமல் இருந்திருந்தால், எஸ்யூவியை வாங்கியே இருந்திருக்க மாட்டேன் என மேலும் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராய்பூர்வா போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்து வழக்கை விசாரித்து வருகின்றனர்.