ரியாக்டின் பிளஸ் மாத்திரை சர்ச்சை! சிப்ளா புனே ஆலையின் உரிமத்தை ரத்து செய்து எஃப்டிஏ அதிரடி
செய்தி முன்னோட்டம்
பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான சிப்ளா ஃபார்மா & லைஃப் சயின்சஸ் நிறுவனத்தின் புனே வாட்கி பிரிவில் இயங்கி வரும் சிஅண்ட்எஃப் ஆலையின் மருந்து விற்பனை உரிமத்தை மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA) உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ரத்து செய்துள்ளது. ரியாக்டின் பிளஸ் மாத்திரைகளின் சேமிப்பு, இருப்புப் பதிவுகள் மற்றும் விநியோகத்தில் ஏற்பட்ட பல்வேறு முறைகேடுகள் காரணமாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முறைகேடுகள்
ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கியக் குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள்
எஃப்டிஏ அதிகாரிகள் புனே வாட்கி ஆலையில் நடத்திய ஆய்வில், கணினியில் உள்ள இருப்புப் பதிவேடுகளுக்கும் உண்மையான மருந்து இருப்புகளுக்கும் இடையே பெருமளவிலான முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும், மருந்துகளை சேமித்து வைப்பதில் போதிய பராமரிப்பு இல்லாததும், காலாவதியான மருந்துகளை சட்டப்பூர்வமான விதிமுறைகளின்படி முறையாகக் கையாளாததும் வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து அங்கிருந்த சுமார் ₹11.91 லட்சம் மதிப்புள்ள மருந்துப் பங்குகளை அதிகாரிகள் உடனடியாகப் பறிமுதல் செய்தனர்.
ஷெடூல் ஹெச்
ஷெடூல் ஹெச் (Schedule H) மருந்து விதிகளுக்குப் புறம்பான நடவடிக்கை
ரியாக்டின் பிளஸ் என்பது மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே வழங்ப்பட வேண்டிய ஷெடூல் ஹெச் (Schedule H) பிரிவை சேர்ந்த மருந்தாகும்.
உரிய அனுமதியின்றி இதன் வலி நிவாரணி மற்றும் காய்ச்சல் குறைக்கும் பண்புகள் குறித்து மருந்துப் பொட்டலங்களில் குறிப்பிட்டிருந்தது மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940க்கு எதிரானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தையிலிருந்து இந்த தவறான மாத்திரைகளைத் திரும்பப் பெற சொன்ன உத்தரவையும் நிறுவனம் முழுமையாகப் பின்பற்றவில்லை.
நடவடிக்கை
ஆகஸ்ட் 27 முதல் உடனடியாக அமலுக்கு வந்த உரிம ரத்து நடவடிக்கை
முறைகேடுகள் குறித்து சிப்ளா நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், நிறுவனம் அளித்த விளக்கங்கள் திருப்திகரமாக இல்லாததால் ஆகஸ்ட் 27, 2026 முதல் அதன் விற்பனை உரிமத்தை எஃப்டிஏ ரத்து செய்தது.
மருந்துகளின் தரம், பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வ விநியோகத்தில் குறிப்பாக ஷெடூல் ஹெச் மருந்துகளின் விஷயத்தில் எவ்வித அலட்சியத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாது என மகாராஷ்டிரா எஃப்டிஏ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.