விவசாயிகள் போராட்டம்: டெல்லி-குருகிராம் எல்லையில் போக்குவரத்து நெரிசல்
டெல்லியில் இன்று விவசாயிகள் "டெல்லி சலோ" போராட்டத்தை தொடங்கியதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தின் காரணமாகவும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாகவும் டெல்லி-குருகிராம் எல்லையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் நெரிசலில் சிக்கியதை காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. சிங்கு, காஜிபூர் மற்றும் திக்ரி எல்லைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டக்காரர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தலைநகருக்குள் நுழைவதைத் தடுக்கவும், சீரான போக்குவரத்தை பராமரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விவசாயிகள் தங்கள் பயிர்கள் மற்றும் விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை(எம்எஸ்பி) நிர்ணயிக்க ஒரு சட்டத்தை இயற்ற கோரி இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
விவசாயிகள் இதற்கு முன் நடத்திய மாபெரும் போராட்டம்
இதே போல், 2021 ஆம் ஆண்டு பண்ணை சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் பெரும் போராட்டங்களை நடத்தினர். அந்த போராட்டத்தின் போது குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது பண்ணை சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு தான் விவசாயிகளின் போராட்டங்கள் கைவிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது விவசாயிகள் மேலும் ஒரு பெரும் கோரிக்கையை முன்வைத்து ஒரு மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மேலும், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.