LOADING...
ஃபேஸ்புக் நட்பினால் 2 ஆண்டுகளில் ரூ.8.7 கோடி இழந்த 80 வயது முதியவர்
2 ஆண்டுகளில் ரூ.8.7 கோடி இழந்த 80 வயது முதியவர்

ஃபேஸ்புக் நட்பினால் 2 ஆண்டுகளில் ரூ.8.7 கோடி இழந்த 80 வயது முதியவர்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 09, 2025
11:10 am

செய்தி முன்னோட்டம்

ஃபேஸ்புக் மூலம் பழகிய பெண் நட்பின் பெயரில், 80 வயது முதியவர் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.8.7 கோடி வரை ஏமாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் தற்போது சைபர் குற்றப்பிரிவில் புகாராக மாறி, விசாரணைக்கு உட்படுத்தபட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த இம்முதியவர், 2023 ஏப்ரலில் 'சார்வி' என்ற பெயரிலான பெண்ணிடம் ஃபேஸ்புக்கில் நட்பாக பழகத் தொடங்கியதாக கூறப்படுகிறது. தொடர் உரையாடலின் பின், சார்வி தனது குழந்தைகள் உடல்நலக் குறைவால் அவதிப்படுவதாகக் கூறி, முதியவரிடம் பண உதவியை கேட்டுள்ளார். முதியவரும் UPI வழியாக பலமுறை பணம் அனுப்பியுள்ளார். இதற்குப் பின் 'கவிதா', 'தினாஸ்', 'ஜாஸ்மின்' என ஒவ்வொரு நபரும் சார்வியின் தோழி அல்லது சகோதரி என அறிமுகம் செய்துகொண்டு, பரிதாப காரணங்களைக் காட்டி மேலும் பணம் பெற்றுள்ளனர்.

மோசடி

734 முறை பணப்பரிமாற்றம் செய்துள்ள முதியவர்

ஒரு கட்டத்தில், தினாஸ் என அறிமுகமானவர், சார்வி இறந்துவிட்டதாகக் கூறி, அவரது மற்றும் முதியவரின் தனிப்பட்ட உரையாடல்களை ஸ்கிரீன் ஷாட் செய்து பகிர்ந்ததாகவும், அதனை பயன்படுத்தி முதியவரை மிரட்டி பணம் பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2023 ஏப்ரல் முதல் 2025 ஜனவரி வரையிலான காலப்பகுதியில், 734 முறை பண பரிமாற்றங்கள் மூலம் ரூ.8.7 கோடி பணம் இழந்துள்ளார். தன் சேமிப்பு எல்லாம் முடிந்த நிலையில், மருமகளிடம் ரூ.2 லட்சம், மகனிடம் ரூ.5 லட்சம் கடனாக பெற்று பணம் அனுப்பியதும் தெரியவந்துள்ளது. பெரியவரின் பணபரிமாற்றத்தில் அவருடைய மகனுக்கு சந்தேகம் எழவே, முழு விவரங்களும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தால், முதியவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நினைவாற்றல் குறைபாடு இருப்பதும் உறுதியாகியுள்ளது.