வேங்கைவயல் விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு
வேங்கைவயல் பிரச்சனை பற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேங்கைவயல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஒருநபர் ஆணையத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தர வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேங்கை வயல் பிரச்னையை விசாரித்து வரும் சிபிசிஐடி தரப்பில் இருந்து குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படாத நிலையில், இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதி ராஜா தலைமையிலான அமர்வு, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட வேங்கைவயல் பிரச்சனை
புதுக்கோட்டை மாவட்டம் முத்துகாடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயல். பகுதியில் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் சில வாரங்களுக்கு முன் மனித கழிவுகள் கலந்திருப்பதாக கூறப்பட்டது. இதை அந்த மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று விசாரித்து உறுதி செய்தார். அப்போது, அந்த பகுதி மக்கள் இன்னும் தீண்டாமை செயல்களை பின்பற்றுவது தெரியவந்தது. இதை ஒழிப்பதற்கு தேவையான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், குடிநீரில் மனித கழிவுகளைக் கலந்தவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. எந்த முன்னேற்றமும் இல்லாததால் அந்த வழக்கு காவல்துறையினரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றபப்ட்டது. சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட பின்னும் இந்த விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.