ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் விமானப்படை கான்வாய் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் படங்கள் வெளியீடு
கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையதாக நம்பப்படும் மூன்று பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சிகளில் இருந்து அவர்களது புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கார்ப்ரல் விக்கி பஹடே கொல்லப்பட்டார், மேலும், அவரது நான்கு சகாக்கள் காயமடைந்தனர். அதனைத்தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பூஞ்ச் தாக்குதல் விசாரணையின் போது மூன்று பயங்கரவாதிகளின் பெயர்கள் அடிபட்டுள்ளன. இல்லியாஸ்(முன்னாள் பாக் இராணுவ கமாண்டோ), அபு ஹம்சா(லஷ்கர் தளபதி) மற்றும் ஹடூன் ஆகிய பயங்கரவாதிகள் பூஞ்ச் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பயங்கரவாதிகளை பிடிக்க நடந்துவரும் தீவிர தேடுதல் வேட்டை
இலியாஸ் 'Fauji' என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் துணை அமைப்பான மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி (PAFF) அமைப்பிற்காக அந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். ரஜோரி மற்றும் பூஞ்ச் காடுகளில் பயங்கரவாதிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரிகள் பல சந்தேக நபர்களை பிடித்து, அந்த மூன்று பயங்கரவாதிகளுடன் அவர்களுக்குள்ள தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். PAFF என்பது ஜெய்ஷ் ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுவாகும். இது கடந்த ஆண்டு டிசம்பரில் பூஞ்ச் நகரில் ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்தி நான்கு வீரர்களைக் கொன்றது.