பொத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலைநேர வகுப்புகள் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை மறுப்பு
தமிழ்நாடு மாநிலத்தில் கோடை கால விடுமுறை முடிந்து கடந்த 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் ஆலோசனை கூட்டமானது சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று(ஜூன்.,27) துவங்கப்பட்டு அடுத்த 2 நாட்களுக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துக்கொண்டார். இந்த கூட்டத்தில், பொதுத்தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் மாலை நேர வகுப்புகள் 5 மணி வரையோ 5.30மணி வரையோ கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது என்று அண்மையில் அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில் இந்த அறிவிப்பிற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.
அரசு பள்ளிகளில் நிலவும் துப்புரவு பணியாளர்களின் பற்றாக்குறை குறித்து ஆலோசனை
அதன்படி, கல்வித்துறை அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், "பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் என்பது வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது தான். தேவைப்படும் அல்லது விருப்பமுள்ள பள்ளி நிர்வாகங்கள் சிறப்பு வகுப்பினை நடத்தலாம் என்று தான் கூறப்பட்டுள்ளதே தவிர, கட்டாயம் என்று கூறப்படவில்லை" என்று விளக்கம் அளித்துள்ளார்கள். மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில், அரசு பள்ளிகளில் நிலவும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் காவலர்களின் பற்றாக்குறை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றும், 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டத்தினை நீட்டிப்பது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறப்படுகிறது.