'மோடிக்கு 75 வயது ஆனாலும் அவர் தான் பிரதமராக வருவார்': அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதில்
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு அடுத்த ஆண்டு 75 வயதாகிறது என்றும், செப்டம்பர் 17(பிரதமர் மோடியின் பிறந்தநாள்) தான் அந்த பதவியில் அவருக்கு கடைசி நாள் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் அமித்ஷா இந்த கருத்தை கூறியுள்ளார். "மோடிஜிக்கு 75 வயதாகிறது என்று மகிழ்ச்சியடையத் தேவையில்லை என்பதை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இண்டியா கூட்டணிக்கும் நான் சொல்ல விரும்புகிறேன். மோடிஜி பிரதமராக முடியாது என்று பாஜகவின் அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதப்படவில்லை. அவர் மீண்டும் பிரதமராகி ஆட்சியை நிறைவு செய்வார்." என்று ஹைதராபாத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமித்ஷா கூறியுள்ளார்.
'பாஜகவின் அரசியல் சாசனத்தில் வயது தொடர்பான எந்த விதியும் இல்லை': ஜேபி நட்டா
நேற்று திகார் சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவால், இன்று மதியம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "பிரதமர் மோடிக்கு செப்டம்பர் 17-ம் தேதி 75 வயதாகிறது. பாஜக கட்சியில் உள்ள அனைத்து தலைவர்களும் 75 வயதில் ஓய்வு பெறுவார்கள் என்று அவர் விதிகளை விதித்தார். அதனால், லால் கிருஷ்ணா அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் 75 வயதில் ஓய்வு பெற்றனர். எனவே, பிரதமர் மோடியும் செப்டம்பர் 17-ம் தேதி ஓய்வு பெறுவாரா?" என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி இருந்தார். கெஜ்ரிவாலின் கருத்துக்கு பதிலளித்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும், டெல்லி முதல்வரின் கருத்தை நிராகரித்தார்.