சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.2.30 கோடி செலவில் எஸ்கலேட்டர்
செய்தி முன்னோட்டம்
சேலம் மாவட்டத்தின் மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், அதிநவீன ஈரடுக்கு பேருந்து நிலையமானது கட்டப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் 5வதுபெரிய நகரமான சேலத்தில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், பழைய பேருந்து நிலையத்தினை நவீனப்படுத்த முடிவு செய்யப்பட்டு ரூ.92 கோடியில் ஈரடுக்கு பேருந்து நிலையத்திற்கான பணிகள் கடந்த 2018ம்ஆண்டு முதல் நடந்துவருகிறது.
தற்போது 95 சதவீத பணிகள் முடிந்துள்ளது என்று கூறப்படுகிறது.
இதனிடையே திருவள்ளுவர் சிலையில் பழைய பேருந்துநிலையத்திற்கு வரும் பாதையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலத்தில் தார்சாலை, தடுப்புச்சுவர் போன்ற பணிகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஈரடுக்கு பேருந்துநிலையத்தில் கீழ் தளத்தில் டூவீலர் பார்க்கிங் மற்றும் கடைகளும், மேல்தளத்தில் பேருந்துகள், நவீன வசதிக்கொண்ட உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது.
பேருந்து நிலையம்
430 பேருந்துகள் வந்துசெல்லும் வகையில் கட்டமைப்பு
இந்நிலையில் தற்போது இந்த ஈரடுக்கு பேருந்துநிலையத்தில் கீழேயிருந்து மேலே செல்ல இரண்டு இடங்களில் படிக்கெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
எனினும், இங்கு எஸ்கலேட்டர் என்னும் தானியங்கி படிக்கெட்டுகள் அமைக்க பலத்தரப்புகள் கோரிக்கை வைத்த நிலையில், மாநில அரசு தற்போது அதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இங்கு 430பேருந்துகள் வந்துசெல்லும் வகையில் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
11,500 சதுர.மீ.,தரைத்தளம் கொண்டு, 4,586சதுர.மீ.,வணிக உபயோகத்துக்காக ஒதுக்கப்பட்டு 54கடைகள் அமைக்கப்படவுள்ளது.
1,181வாகனங்கள் நிற்கும் வகையில் கார்பார்க்கிங், ரயில்நிலையத்தில் போல் வைபை சேவை, ஏசி, பயணிகள் தங்கும் அறைகள் உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது.
இதையடுத்து 2 கோடியே 30லட்சம் செலவில் எஸ்கலேட்டர் அமைக்கப்படவுள்ளது.
இது 7மீ., உயரத்தில் இறங்கவும், ஏறவும் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான டெண்டர் விரைவில் துவங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.