ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நலமுடன் உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உடல்நல குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று(மார்ச்.,16) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. தொடர்ந்து அவருக்கு இதயவியல் நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போது நெஞ்சு வலி காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலத்துடன் உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் 6வது மாடியில் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சீராக உள்ளது - சுகாதாரத்துறை
இதனை தொடர்ந்து, இளங்கோவனுக்கு மீண்டும் பரிசோதனை செய்ய உள்ளதாகவும், மருத்துவர்கள் அவருக்கு பரிசோதனை செய்த பிறகு தற்போதைய அவரது உடல்நலம் குறித்து தகவல்கள் வெளியாகும் என முன்னதாக கூறப்பட்டிருந்தது. அதன் படி தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சீராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு சில நாட்கள் கண்காணிப்பிற்கு பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் மற்றும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.