ஈரோட்டில் தாலி கட்டிய கையோடு மனைவியை மாட்டு வண்டியில் அழைத்துச்சென்ற மருத்துவர்
தற்போதைய காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து கார், பைக் முதலியன இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. எனினும், நமது பாரம்பரிய பயணமான மாட்டுவண்டி பயணத்தினை யாராலும் மறக்கமுடியாது. அந்த வகையில் ஈரோட்டில் திருமணம் முடிந்த ஜோடி புகுந்த வீட்டிற்கு மாட்டு வண்டியில் சென்றது குறித்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது. ஈரோடு திண்டல் சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் கே.சி.பழனிசாமி-டி.உமா மகேஸ்வரி, இவர்களது மகன் டாக்டர் நிசாந்த் பாலாஜி. இவர் தோல் மருத்துவத்தில் தன்னுடைய உயர்கல்வியினை படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் ஈரோடு வெட்டுக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த சி.ரமேஷ்-ஆர்.வசந்தாமணி தம்பதியின் மகள் சி.ஆர்.ரித்துவுக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து இவர்களுக்கு நேற்று(மார்ச்.,27) வேப்பம்பாளையத்தில் உள்ள திருமண மகாலில் திருமணம் நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் 4 கிமீ., பயணம் செய்த புதுமண தம்பதி
தமிழ்முறைப்படி இருவருக்கும் திருமணம் முடிந்தநிலையில், புதுமண தம்பதிகள் வீட்டுக்கு அழைத்துசெல்லும் நிகழ்வு நடந்த நிலையில், வித்தியாசமாக மாட்டு வண்டியில் அவர்கள் பயணம் செய்தனர். அவர்கள் செல்ல முன்கூட்டியே அந்த மாட்டுவண்டி அலங்கரிக்கப்பட்டு இரட்டை காளைகள் பூட்டப்பட்டு தயார்நிலையில் மண்டப வாசலில் வண்டி நின்று கொண்டிருந்தது. இதில் ஏறிய ஜோடிகள் ஆளுக்கொரு தாம்பு கயிற்றினை பிடித்துக்கொண்டனர். அலங்கரிக்கப்பட்ட சாட்டையினை கொண்டு மாடுகளை தட்டிதட்டி வண்டியை அங்கிருந்து நகர்த்தி சென்றனர். மாட்டு வண்டியில் 4 கிமீ.,தூரம் பயணம்செய்த புதுமண ஜோடிகளை பார்த்தோருக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணமகன் கூறுகையில், நாங்கள் மாட்டுவண்டியில் வரவேண்டும் என்பது எங்களது பெற்றோரின் ஆசை. திருமணத்திற்கு முந்தையநாளும் நான் எனது வீட்டிலிருந்து மாட்டுவண்டியில் தான் வந்தேன் என்று அவர் கூறியுள்ளார்.