ஈரோடு இடைத்தேர்தல் - வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் விநியோகம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், திமுக-அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே பெரும் போட்டி நடந்து வருகிறது. அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அப்பகுதி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பண பட்டுவாடா செய்வதாகவும், பரிசு பொருட்களை வழங்குவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அப்பகுதி மக்களுக்கு பிரச்சாரம் ஓர் தொழிலாகவே மாறிவிட்டது. ஏனெனில் பிரச்சாரத்திற்கு சென்றால் 500-1000 ரூபாய் வரை கொடுப்பதோடு பிரியாணியும் வாங்கித்தரப்படுகிறது என்று கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல் அப்பகுதி மக்களுக்கு குக்கர், வேஷ்டி, பட்டு சேலை, வெள்ளி கொலுசு போன்ற விதவிதமான பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
ஃபயர் போல்ட் என்னும் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் வழங்கப்பட்டுள்ளது
இந்நிலையில் நேற்று திமுக கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் வழங்கப்பட்டதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது. ஃபயர் போல்ட் என்னும் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் வழங்கப்பட்டுள்ளது. வாட்ச் இருந்த பாக்சில் அதன் விலை 7,999 என்று இருப்பதை கவனித்த வாக்காளர்கள் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார்கள். மேலும் 35 வயதிற்குட்பட்டோருக்கு இந்த ஸ்மார்ட் வாட்ச்'ஆனது ஆண்கள் பெண்கள் என அவரவருக்கு ஏற்றார் போல் கொடுக்கப்பட்டுள்ளது. 35 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஆண்களுக்கு சோனாட்டா நிறுவன லெதர் வாட்ச் மற்றும் பெண்களுக்கு தங்கநிற செயின் வைத்த வாட்ச் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பல பரிசுகள் கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அப்பகுதி மிகுந்த பரபரப்பான பகுதியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.