உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை நிர்வாகியிடம் அமலாக்கத்துறை விசாரணை
சென்னை லைக்கா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் நடிகரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடத்தும் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனத்துடன் கோடிக்கணக்கான பண பரிமாற்றம் நடந்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளது என்று தெரிகிறது. இதன் அடிப்படையில் சென்னை வேளச்சேரியில் உள்ள உதயநிதியின் நெருங்கிய நண்பர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. பின்னர் எழும்பூர் எத்திராஜ் சாலையில் உதயநிதியின் ரசிகர் மன்றம் மற்றும் அறக்கட்டளை நிறுவனத்தினை நடத்திவரும் வழக்கறிஞர் பாபு என்பவர் நடத்தி வருகிறார். அவரது அலுவலகத்திலும் அமலாக்கத்துறை கிட்டத்தட்ட 12 மணிநேரம் சோதனை நடத்தியுள்ளது. இந்த சோதனையின் போது பாபு அலுவலகத்தில் இல்லை என்று கூறப்படுகிறது.
இன்றும் ஆஜராகுமாறு பாபுவிற்கு அமலாக்கத்துறை உத்தரவு
இதனால் பாபுவை நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவிட்டது. அதன்பேரில் அவர் நேற்று(மே.,17)சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தத்தோடு, அறக்கட்டளை தொடர்பான சில ஆவணங்களையும் பாபு சமர்ப்பித்தார். இவரிடம் கிட்டத்தட்ட 2 மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அறக்கட்டளை தொடர்பான கேள்விகளை கேட்டனர். அதற்கு நான் பதில் அளித்துள்ளேன் என்று கூறினார். இந்நிலையில் அவரை மீண்டும் இன்று(மே.,18) நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்ட நிலையில், மீண்டும் அவர் அதிகாரிகள் கேட்ட விவரங்களுடன் ஆஜராகியுள்ளார். அறக்கட்டளை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட பொழுது முக்கியமான சில ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.