"நியாயமான விசாரணையை ஊக்குவிக்கவும்": அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா கருத்து
அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது அறிக்கைகளை அமெரிக்க அரசாங்கம் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. டெல்லி முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு "நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் விசாரணையை" நடத்த ஊக்குவிக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கத்திடம் அமெரிக்கா கோரியுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து ஜெர்மனி தூதுவரும் சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் மற்ற இந்திய குடிமகனைப் போலவே கெஜ்ரிவாலுக்கும் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு உரிமை உண்டு என்று ஜெர்மனியின் வெளியுறவு அலுவலகம் அப்போது கூறி இருந்தது.
ஜெர்மனியின் கருத்துக்கு இந்தியா கண்டனம்
"நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் தொடர்பான தரநிலைகளும் இந்த வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று ஜெர்மன் அரசாங்க செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை தெரிவித்தீருந்தார். ஆனால், ஜெர்மனியின் இந்த கருத்துக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்த இந்திய அரசு, இது இந்தியாவின் உள் விவகாரங்களில் அப்பட்டமாக தலையிடுவதற்கு சமம் என்று தெரிவித்திருந்தது. டெல்லி மதுபான கொள்கையை இயற்றி நடைமுறைப்படுத்தும் போது பணமோசடி நடந்தததாக ஆம்-ஆத்மி தலைவர்களிடம் பல நாட்களாக விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், இதே வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வியாழன் அன்று கைது செய்யப்பட்டார்