முதல் பெண் யானை பராமரிப்பாளராக பெள்ளி: அரசு வேலை வழங்கிய தமிழக முதல்வர்
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் பராமரிக்கப்படும் வளர்ப்பு யானைகளை மையமாக வைத்தே 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்னும் ஆவண படம் எடுக்கப்பட்டது. அப்படத்திற்கு அண்மையில் ஆஸ்கார் விருது கிடைக்கப்பெற்ற நிலையில், பாகன் தம்பதிகளாக பொம்மன்-பெள்ளிக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் மு.க.ஸ்டாலின் இவர்களுக்கு உதவி தொகையாக ரூ.1 லட்சம் வழங்கினார். அதனை தொடர்ந்து தற்போது அரசு பணிக்கான நியமன ஆணையினை பெள்ளிக்கு அளித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் கொடுக்கப்பட்ட பணி நியமன ஆணை
இதன் மூலம் தமிழ்நாடு மாநிலத்தில், முதல் பெண் யானை பராமரிப்பாளராக அரசால் நியமனம் செய்யப்பட்ட பெண் என்னும் பெருமையினை பெள்ளி பெற்றுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தெப்பக்காடு யானைகள் முகாமில் முதன்முறையாக பெண் காவடியாக பெள்ளி நியமனம் செய்யப்பட்டுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி நியமன ஆணையினை சென்னை தலைமை செயலகத்தில் நேற்று(ஆகஸ்ட்.,3) தமிழக முதல்வர் பெள்ளிக்கு வழங்கினார். நீலகிரியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாம் ஆசியாவிலேயே பழமைவாய்ந்த முகாம்களுள் ஒன்றாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.