
வாக்காளர் பட்டியல் சீரமைப்பு: நாடு முழுவதும் SIR மேற்கொள்ள தயாராகி வருகிறது தேர்தல் ஆணையம்
செய்தி முன்னோட்டம்
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் சிறப்புத் திருத்தப் பணிக்கான (SIR) உத்தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) பிறப்பித்துள்ளது. மாநில தேர்தல் அதிகாரிகளுடன் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், செப்டம்பர் 30 க்குள் இந்தப் பணிகளுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம், அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் இந்த மெகா சீரமைப்பு பணி தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திருத்தப் பணியின் முக்கிய நோக்கம், சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவது ஆகும். குறிப்பாக வங்கதேசம் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து சட்டவிரோதக் குடியேற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
தயார் நிலை
முந்தைய திருத்தப் பட்டியலுடன் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்
இந்தப் பணியை எளிதாக்க, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் (CEOs) தங்கள் முந்தைய திருத்தப் பணிகளின் வாக்காளர் பட்டியலைத் தயாராக வைத்திருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பெரும்பாலான மாநிலங்களில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இத்தகைய விரிவான சீரமைப்பு பணி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பீகாரில் ஒரு முன்னோடித் திட்டமாக இந்தப் பணி தொடங்கப்பட்ட பிறகு, நாடு முழுவதும் இந்தச் சிறப்புத் திருத்தப் பணி மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டு தமிழகம், அசாம், கேரளா, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் போன்ற முக்கிய மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.