"விசில் போடு!": விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு 'விசில்' சின்னம் ஒதுக்கீடு
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றி கழகம்' (TVK), தனது முதல் தேர்தல் பயணத்திற்கான முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. வருகிற 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக, அக்கட்சிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் 'விசில்' சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்கி வியாழக்கிழமை உத்தரவிட்டது. சின்னம் ஒதுக்கப்பட்ட செய்தி வெளியான அதே வேளையில், தவெக தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) சென்னையில் நடைபெற்ற கட்சியின் முதல் தேர்தல் பிரச்சாரக் குழு கூட்டத்தில், சமூக நீதி மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை மையமாகக் கொண்ட தேர்தல் அறிக்கை (Manifesto) குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
தேர்தல் அறிக்கை
தேர்தல் அறிக்கை மற்றும் பிரச்சார நடவடிக்கை
முன்னதாக, ஜனவரி 16-ஆம் தேதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 12 பேர் கொண்ட குழுவை விஜய் அமைத்திருந்தார். இந்த குழு தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, விவசாயி கள், மீனவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைச் சேகரித்து வருகிறது. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற சமத்துவக் கொள்கையின் அடிப்படையில், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைத் தமிழகத்திற்கு தருவதே தங்கள் இலக்கு என தவெக தெரிவித்துள்ளது. தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்காக பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை வழங்கத் தனி இணையதளமும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. சின்னம் கிடைத்துள்ளதால், இனி வரும் நாட்களில் 'விசில்' சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பிரம்மாண்ட பிரச்சாரங்களை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.