குடியரசு தின விழா கொண்டாட்டம் - எகிப்து அதிபர் வருகை
வருடாவருடம் இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் சிறப்பு அணிவகுப்புகள் மற்றும் நடத்தப்படும் மற்ற நிகழ்வுகளுக்கு சிறப்பு விருந்தினர்களை அழைப்பது வழக்கம். அதன்படி கடந்தாண்டு குடியரசு தின விழாவிற்கு 5 மத்திய ஆசிய குடியரசு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். இவர்கள் டெல்லியில் நடந்த இந்திய-மத்திய ஆசிய மாநாட்டில் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிட வேண்டியவை. அதன்படி, இந்தாண்டு குடியரசு தின விழாவிற்க்கு சிறப்பு விருந்தினராக இந்தியாவிற்கு யார் வருகை தரவுள்ளார்கள் என்பது அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வருட குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற எகிப்து அதிபர்
வரும் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க எகிப்து அப்தெல் பட்டா சிசி-க்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். இதனை கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வழங்கியுள்ளார். மோடியின் அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து வரும் குடியரசு தின விழாவில் விருந்தினராக பங்கேற்க வரும் 24ம் தேதி எகிப்து அதிபர் 180 பேர் குழுவினருடன் இந்தியா வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு 75 ஆண்டுகள் ஆகிறது. மேலும், இந்தியா தலைமையில் நடைபெறவுள்ள ஜி20 கூட்டத்தில் விருந்தினராக கலந்துகொள்ளவும் எகிப்துக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.